பிரதமர் வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் புதைந்ததால் பரபரப்பு
பிரதமர் வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் புதைந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 21, 2024 04:35 AM
ராமேஸ்வரம் : பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் வந்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நேற்று மதியம், 2:15 மணிக்கு ராமேஸ்வரம் அருகே அமிர்தா பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்திறங்கினார்.
சமீபத்தில் பெய்த தொடர் மழையால், மைதானம் முழுதும் ஈரப்பதமாக இருந்தது.
விசாரணை
இதை சரி செய்து ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அதன் சக்கரம், 20 செ.மீ., வரை தரையில் புதைந்தது.
இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மைதானம் அமைக்கப்பட்ட விதம், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளதா, ஹெலிபேட் அமைத்தவர்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கெட்டுப்போன உணவு
திருச்சி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, பிரதமர் மோடி நேற்று வந்தார்.
அவர் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஹெலிபேட் உள்ள கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதி வரையிலும்,பஞ்சக்கரையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வரையிலும், 3,500க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த பாதுகாப்பு பணி போலீசாருக்கு நேற்று வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போய் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் பாதுகாப்பு பணியில் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் பெரும்பாலான போலீசார், சாப்பிடாமலேயே பணியில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை பிரதமர் வருகையின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போய் இருந்ததாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், நேற்றும், அதே சம்பவம் நடந்துள்ளதாக கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

