காஞ்சி சங்கர மடத்தில் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு; சன்யாச தீட்சை அளிக்கிறார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காஞ்சி சங்கர மடத்தில் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு; சன்யாச தீட்சை அளிக்கிறார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
UPDATED : ஏப் 30, 2025 05:45 AM
ADDED : ஏப் 29, 2025 09:09 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சங்கர மடம் உள்ளது. பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஆந்திர மாநிலம் துனி நகரில் பிறந்த, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்கை தீர்த்தத்தில், அட்சய திருதியை நாளான இன்று(ஏப்.,30) காலை 6:00ல் இருந்து, 7:30 மணிக்குள் இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டிற்கு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 71வது மடாதிபதி சன்யாச ஆசிரம தீட்சை வழங்கி ஆசி வழங்குகிறார்.
இதையொட்டி காமாட்சியம்மன் கோவிலில் உள்ள பஞ்ச கங்க தீர்த்த தெப்ப குளத்தில், விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் கூறியதாவது:
இளைய மடாதிபதிக்கு, சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் காமாட்சியம்மன் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து நவராத்திரி மண்டபம் வழியாக பார்வையாளர் மாடத்துக்கு வர வேண்டும்.
அங்கிருந்து திருக்குளத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும், பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் உள்ளிட்டோர் திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் தெப்பலில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீட்சை வழங்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மூலவர் காமாட்சி அம்மனை இளைய மடாதிபதி தரிசனம் செய்வார்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னிதியில் இளைய மடாதிபதிக்கு தீட்சை நாமம் சூட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. பின், ஊர்வலமாக சங்கர மடத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டு அங்கு, 71வது மடாதிபதியாக பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.