எங்கள் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கொடிக்கும் வேறுபாடுகள் உள்ளன: கோர்ட்டில் த.வெ.க., பதில்
எங்கள் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கொடிக்கும் வேறுபாடுகள் உள்ளன: கோர்ட்டில் த.வெ.க., பதில்
ADDED : ஜூன் 05, 2025 03:02 AM

சென்னை: 'த.வெ.க., கட்சி கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன.
'கட்சியின் கொள்கை, கோட்பாடு, தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் வைத்து, த.வெ.க., கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது' என, சிவில் நீதிமன்றத்தில், த.வெ.க., சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில், யானை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.,வின் கொடியில், இரண்டு யானைகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதனால், த.வெ.க., கொடியில், யானை உருவத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், பொதுச்செயலர் ஆனந்த் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'த.வெ.க., கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் இடையே, நிறைய வேறுபாடுகள் உள்ளன.
கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் வைத்து, த.வெ.க., கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கலாசாரம், வரலாற்று பெருமை, சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில், தனித்துவத்துடன் த.வெ.க., கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடியின் மத்தியில், வெற்றியின் அடையாளமாக, வாகை மலர் வரையப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சட்ட மற்றும் தேர்தல் உரிமைகளை மீறவில்லை.
வாக்காளர்களை குழப்பும் வகையில், த.வெ.க. கொடி உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து நடந்த விசாரணையில், பகுஜன் கட்சி சார்பில், வழக்கறிஞர் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டதாவது:
எங்கள் கட்சி கொடியின் யானை உருவம், த.வெ.க., கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பிற கட்சிகளின் கொடியில் உள்ள உருவங்களை, மாற்றுக்கட்சிகள் பயன்படுத்த, அக்கட்சிகள் அனுமதிக்குமா? அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, தேர்தல் கமிஷன் யானை சின்னத்தை வழங்கி உள்ளது.
எங்கள் கட்சிக்கொடியில், யானை உருவம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, த.வெ.க., கொடியில், யானை உருவத்தை பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.