தமிழகத்தில் காலாவதி சுங்கச்சாவடிகள் இல்லையாம்: அமைச்சர் வேலு விளக்கம்
தமிழகத்தில் காலாவதி சுங்கச்சாவடிகள் இல்லையாம்: அமைச்சர் வேலு விளக்கம்
ADDED : ஏப் 02, 2025 02:23 AM
சென்னை:''தமிழகத்தில் எந்த சுங்கச்சாவடியும் காலாவதி ஆகவில்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது,'' என்று, அமைச்சர் வேலு விளக்கம் அளித்தார்.
சட்டசபையில் நடந்த மானியகோரிக்கை விவாதம்:
அ.தி.மு.க., - திண்டுக்கல் சீனிவாசன்: தமிழகத்தில் இப்போது, 65க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இப்போது கூட, 75 முதல் 80 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
இதனால், வாகன உரிமையாளர்கள், பொது மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. சுங்கச்சாவடிகளால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். காலாவதியான பின்னும் சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து, சுங்க கட்டணத்தை ரத்து செய்ய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில், 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணத்தை குறைக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதேபோல, பரனுார் உள்ளிட்ட 13 காலாவதியான சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய, மாநில அரசு வாயிலாக கடிதம் எழுதினோம். ஆனால், 'தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகள் எதுவும் இல்லை' என, மத்திய அரசிடம் இருந்து பதில் வந்துள்ளது.
கடந்த, 2023ம் ஆண்டு, சுங்க கட்டணம் வசூலிப்பு தொடர்பான அரசாணையை மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, 'சாலையை மேம்படுத்துகிறோம்; விரிவுபடுத்துகிறோம்; விபத்து பகுதிகளில் மேம்பாலம் கட்டுகிறோம்' என்று கூறி, கட்டண வசூலை தொடர்கின்றனர். இதனால், காலாவதி சுங்கச்சாவடிகள் இல்லை என்கின்றனர். இருப்பினும், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.
திண்டுக்கல் சீனிவாசன்: மதுரை மாநகரில், குறுகிய காலத்தில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், 220 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. அது, சிறிய மழைக்கு தாக்கு பிடிக்காமல் மழைநீர் உள் புகுந்துள்ளது. நுாலகத்திற்கு சேதாரம் ஏற்பட்டது. அவசர கோலத்தில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதே இதற்கு காரணம்; பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டட வடிவமைப்பை உருவாக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில், பி.வி.சி., குழாயில் பிளாஸ்டிக் பையால் அடைப்பு ஏற்பட்டது. இதனால், பைப் உடைந்து, வரவேற்பு பகுதி வரை தண்ணீர் சென்றது. உடனடியாக பிரச்னை கண்டறியப்பட்டு, அது சரி செய்யப்பட்டது. அதன்பின் பெய்த பெருமழையில், ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வரவில்லை. நுாலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

