ADDED : ஜூலை 11, 2025 12:36 AM
சென்னை:தமிழகத்தில் 28 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம், கடந்த ஜன., 5ம் தேதியுடன் முடிந்தது.
இதையடுத்து, இந்த மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு ஊரக உள்ளாட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறி, 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு மாதம் வரை என அறிவிக்கப்பட்டது. அதன்படி பதவிக் காலம் முடிந்த நிலையில், 2026 ஜனவரி 5ம் தேதி வரை, சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார். இதனால், 2026 ஜன., மாதம் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் முடிந்த பின், அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக தெரிகிறது.