ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தபால் உறைகள் இல்லை; டிரைவிங் லைசென்ஸ் அனுப்புவது பாதிப்பு
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தபால் உறைகள் இல்லை; டிரைவிங் லைசென்ஸ் அனுப்புவது பாதிப்பு
ADDED : மார் 22, 2025 05:27 AM

தமிழகத்தில் 13 மண்டலம், 110 வட்டார போக்குவரத்து அலுவலகங்களான, ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள், 60 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில், 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு சான்றிதழ் போன்றவை விண்ணப்பதாரர்களுக்கு நேரில் வழங்கப்பட்டன.
தாமதம்
இதில், இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இவற்றை தவிர்க்க, 2024 பிப்ரவரி 28 முதல், டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு சான்றிதழ் போன்றவற்றை, விண்ணப்பதாரர்களுக்கு விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சேலம் மண்டலத்தில் கடந்த 11 நாட்களாக தபால் உறை இருப்பு இல்லாததால், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை, விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுப்ப முடியவில்லை. மற்ற மண்டலங்களில், 12 முதல் 15 நாட்களாக தபால் உறை இருப்பு இல்லை. சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும், ஐந்து லட்சம் ஸ்மார்ட் கார்டுகள், விரைவு தபாலில் அனுப்பப்பட்டன. தபால் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை, தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ், அதை புதுப்பித்தல், முகவரி, திருத்தம், வாகனப்பதிவு சான்று, 'ஸ்மார்ட்' கார்டுகள் பெற 200 ரூபாய், 'போஸ்டல் பீஸ்' எனும் தபால் கட்டணமாக, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் செலுத்துகின்றனர்.
பெற முடியவில்லை
கடந்த 15 நாட்களாக தலைமை அலுவலகத்தில் இருந்து தபால் உறைகள் அனுப்பப்படாததால், 13 மண்டலங்களிலும், விண்ணப்பதாரர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு சான்று அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள், உரிய நேரத்தில் ஓட்டுநர், நடத்துநர் உரிமம், வாகனப்பதிவு சான்று உள்ளிட்டவை பெற முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.
- நமது நிருபர் --