விஜய் கட்சிக்கும் எங்களுக்கும் 1,000 கி.மீ., துார இடைவெளி: சீமான்
விஜய் கட்சிக்கும் எங்களுக்கும் 1,000 கி.மீ., துார இடைவெளி: சீமான்
ADDED : ஜூலை 08, 2025 03:24 AM

சென்னை: ''திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என கூறினோம். அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:
திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னோம். கூட்டணி அமைக்க எத்தனையோ அழைப்புகள் வந்தன. இதுவரை மறுத்து வருகிறோம்.
துவக்கத்தில் சொன்னதை கடைப்பிடித்து வருகிறோம். தனித்து நின்று தேர்தலை சந்தித்து, நான்குமுறை தோல்வி அடைந்தாலும், ஐந்தாவது முறையும் தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறோம். 234 தொகுதிகளிலும் போட்டி யிட உள்ளோம். இதில் மாற்றமே கிடையாது.
ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டி என த.வெ.க., கூறுகிறது. அப்படியென்றால், தமிழை காட்டுமிராண்டு மொழி, சிலப்பதிகாரத்தை விலை மாதர் காப்பியம், தொல்காப்பியனை ஆரியன் அடிமை, வள்ளுவனை பார்ப்பனன் அடிமை என்று ஈ.வெ.ரா., வீதிக்கு வீதி முழங்கினாரே.
அதையெல்லாம் த.வெ.க.,வும் நடிகர் விஜயும் ஏற்கின்றனரா?
ஈ.வெ.ரா.,வின் கொள்கைப் பிரசாரத்தை ஏற்காமல் அவரை கடுமையாக விமர்சிக்கிறோம். ஆனால், த.வெ.க., அவரை தாங்கிப் பிடிக்கிறது. அதனால் தான் சொல்கிறோம். த.வெ.க.,வுக்கும், நா.த.க.,வுக்கும், 1,000 கி.மீ., துாரம் இடைவெளி உள்ளது. நாங்கள் அரசியல் விடுதலைக்கு போராடு கிறவர்கள். அரசியல் வியாபாரத்திற்கு அல்ல.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஒப்புக்கொண்டால், அவரையும் சேர்த்துக் கொண்டு, ஓர் அணியில் நிற்போம். அவர் என்னுடன் இருப்பாரோ, இல்லையோ, அவருடன் நான் இருப்பேன். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.