'பார்' நடத்துவதில் தி.மு.க.,வினர் குஸ்தி ரோட்டுக்கு வந்த சண்டையால் பரபரப்பு
'பார்' நடத்துவதில் தி.மு.க.,வினர் குஸ்தி ரோட்டுக்கு வந்த சண்டையால் பரபரப்பு
ADDED : ஜன 07, 2024 01:54 AM
பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர பகுதியில், டாஸ்மாக் மதுபான, 'பார்'கள் தற்போது ஆளுங்கட்சியின் நகர முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் பினாமி மற்றும் ஆதரவாளர்கள் பெயரில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
அதில், பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில், தனியார் வணிக வளாகத்தில் இருந்த மதுபான 'பார்' ஏற்கனவே உள்வாடகைக்கு எடுத்திருந்த தி.மு.க.,வை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், தற்போது ஏலம் எடுத்த அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
தற்போது ஏலம் எடுத்த தி.மு.க.,வினர், இரவு நேரத்தில், பார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகவும், ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் மற்றொரு தரப்பினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ரோட்டில் நின்று இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர். இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசார் முன்னிலையிலும், இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அதன்பின், 'பார்' கதவை பூட்டி, இருதரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவங்களை அவ்வழியாக சென்றோர், படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளை எதிர்த்து, எதிர்கட்சியாக இருந்த போது தி.மு.க.,வினர் போராடினர்.
தற்போது, அவர்களே, 'பார்' நடத்துவதில் போட்டி போட்டு வீதியில் சண்டை போட்டுக்கொள்ளும் சம்பவம் மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.