அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 08, 2025 11:46 PM
சென்னை:'அன்புமணி தலைமையில் இன்று நடக்கவுள்ள பா.ம.க., பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க.,வில் தந்தை - மகன் இடையேயான மோதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமதாஸ் - அன்புமணி ஆகிய இருவர் தரப்பிலும், பொதுக் குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது.
கேள்வி எழுப்பினார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என, ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலர் முரளிசங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன் அறைக்கு நேரில் வரும்படி கூற முடியுமா' என, இரு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நேற்று மாலை 5:30 மணிக்கு, தன் அறைக்கு ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வரும்படி நீதிபதி அழைப்பு விடுத்தார். 'இந்த சந்திப்பின் போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதியில்லை' என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு, மாலையில் அன்புமணி வந்தார்; அங்கிருந்து, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறைக்கு சென்றார். அன்புமணியுடன் வழக்கறிஞர்கள் கே.பாலு, இளவரசன் ஆகியோர் உடன் வந்தனர். ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு வந்தார்.
பின், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறைக்கு, அன்புமணி மட்டும் சென்றார். அவரிடம் தனியாக நீதிபதி பேசினார். 'நேரில் வர ஆவலுடன் இருந்தேன்; உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை' என, ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.
பின், தைலாபுரத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ராமதாஸ் ஆஜரானாார். இருவரிடம் நீதிபதி பேசினார்.
தொடர்ந்து, பொதுக் குழுவுக்கு தடை கேட்ட மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நடந்தன. மனுதாரர் முரளிசங்கர் தரப்பில், 'பொதுக் குழுவை கூட்ட, கட்சியின் நிறுவனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது' என, வாதிடப்பட்டது.
தள்ளுபடி செய்தார்
அன்புமணி தரப்பில், 'கட்சி சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது. கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலர் ஆகியோருக்கு மட்டுமே, பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது.
'நிறுவனரின் வழிகாட்டுதலின்படி பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நிறுவனர் ராமதாசுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், 'பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கில் நடக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே தலையிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''பொதுக் குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். உட்கட்சி விவகாரம் தொடர்பாக, உரிமையியல் நீதிமன்றத்தை, இரு தரப்பும் அணுகலாம்,'' என உத்தரவில் கூறியுள்ளார்.