ADDED : ஜூன் 10, 2025 05:18 PM
திருநெல்வேலி:டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறு. அதை அரசோடு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய நூலகத்தை இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் கூலிப்படை கலாசாரம் இருந்தது. ஆனால் திமுக அரசு வந்த பிறகு கூலிப்படைகள் அடக்கப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கல்விமுறை புத்தக அறிவை மட்டுமே வழங்கியது. கவர்னர் அதில் படித்தவர் தான். அறிவை வளர்ப்பதற்காகவே புதிய கல்வி கொள்கை என்று கூறுவதாக இருந்தால், பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே . அம்பேத்கர் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியே கவர்னரும், அனைவரும் நடக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறு. அதை அரசோடு இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லை.திமுக கூட்டணியில் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே உள்ள திமுக கூட்டணி 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறோம்.
இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்ற உலக வங்கியின் ஆய்வு அறிக்கை உண்மைக்குபுற்பமான செய்தி.இதை ஊடகங்கள் மூலமாக மத்திய அரசு பரப்ப வைக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் முழுக்க முழுக்க பொய்யானது, எந்த ஆதாரமும் இல்லாதது.
தமிழகத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்காக இல்லை. அது மகளிர் உரிமைத்தொகை. இன்னும் பல பேருக்கு வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அப்பாவு கூறினார்.