'தனியாரிடம் மின்சார பஸ் ஒப்படைத்ததில் டீலிங் இல்லை'
'தனியாரிடம் மின்சார பஸ் ஒப்படைத்ததில் டீலிங் இல்லை'
ADDED : ஏப் 24, 2025 04:40 AM

சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., அருண்குமார்: சென்னையில், பூந்தமல்லி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, மத்திய பணிமனை, வியாசர்பாடி ஆகிய ஐந்து பணிமனைகளை தனியார் மயமாக்க, அரசு முயற்சிப்பதாக அறிகிறேன். இதில் என்ன 'டீலிங்' மறைந்துள்ளது?
அமைச்சர் சிவசங்கர்: முதற்கட்டமாக, உலக வங்கி பரிந்துரையின்படி, தனியார் ஒப்பந்த முறையில், தமிழகத்தில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மின்சார பஸ்களை இயக்க, 'டெண்டர்' விடப்பட்டு, அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கிறது. இதில், எந்த டீலிங்கும் இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: சென்னை மாநகரில், ஐந்து பணிமனைகளில் உள்ள பஸ்களின் இயக்கம், பராமரிப்பு அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதைத்தான் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கேள்வி எழுப்புகிறார்.
அமைச்சர் சிவசங்கர்: சார்ஜிங் கட்டமைப்பை நிறுவ அந்த பணிமனைகள், மின்சார பஸ்களை டெண்டர் எடுத்துள்ள நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு உள்ளன.
அருண்குமார்: போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர்களை, தனியார் நிறுவனம் தேர்வு செய்து வருகிறது.
அமைச்சர் சிவசங்கர்: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டு, அண்ணா பல்கலையால் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டே, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தனியார் நிறுவனத்தால் தேர்வு செய்யப்படவில்லை.
ஓட்டுநர், நடத்துநர் இல்லாத நிலையில், தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் வாயிலாக ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்கப்பட்டனர். ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.