ADDED : செப் 09, 2025 12:08 AM

பழநி: ''தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு துறையே இல்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்ட அவர் பழநியில் நடந்த பிரசாரத்தில் பேசியதாவது :
தமிழகத்தில் பலர் போதை அடிமைகளாக உள்ளனர். அரசு விழிப்போடு இருந்திருந்தால் போதை கட்டுப்பட்டு இருக்கும். திறமை இல்லாத தமிழக முதல்வரால் தமிழகம் போதை நிறைந்த மாநிலமாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். போலீசாரை கண்டு குற்ற செயல் புரிபவர்கள் அச்சப்படும் நிலை மாறி போலீசார் அச்சப்படும் அவல நிலை உள்ளது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த மாநிலம் சிறப்பாக இருக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்புகள் அமையும். அ.தி.மு.க., ஆட்சி முன்மாதிரியான ஆட்சியாக இருந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் 17 மருத்துவ கல்லுாரிகள், 7 சட்டக் கல்லுாரிகள் உட்பட பல்வேறு கல்லுாரிகள் துவங்கப்பட்டன. ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் வகையில் இருந்தது.
தி.மு.க., ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் ஊழல் வெளிப்படும்.
டி.ஜி.பி., அலுவலகம் முன்பே பொதுமக்கள் தாக்கப்படுகின்றனர். தி.மு.க., அரசு நடத்தும் முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் ஆற்றில் கிடக்கும், இல்லை எனில் டீக்கடையில் இருக்கும். தி.மு.க., மக்களிடம் ஆசைகளை துாண்டி ஏமாற்றி வருகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவமனைகளில் முறைகேடு நடந்துள்ளது.
அந்த மருத்துவமனை உரிமையாளரை கைது செய்யவில்லை என்றார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ரவிமனோகரன் பங்கேற்றனர்.