எப்.எஸ்.ஐ., கட்டணங்களுக்கு இப்போதைக்கு ஜி.எஸ்.டி., இல்லை
எப்.எஸ்.ஐ., கட்டணங்களுக்கு இப்போதைக்கு ஜி.எஸ்.டி., இல்லை
ADDED : டிச 24, 2024 03:34 AM
சென்னை : கட்டுமான திட்டங்களில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு அனுமதி கட்டணங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
நிலத்தின் அளவு அடிப்படையில், அதில் எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் அனுமதிக்கலாம் என்பதை வரையறுப்பது, தளபரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., ஆகும். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, நிலத்தின் அளவில் இரண்டு மடங்கு வரை எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்படுகிறது.
கட்டுமான திட்ட அனுமதியின் போது, ஒவ்வொரு கட்டடத்துக்கும் தளபரப்பு குறியீட்டுக்கான கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. இதில், கூடுதல் கட்டணம் செலுத்தி, கூடுதல் தளபரப்பு குறியீட்டை பெறவும் அனுமதிக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள், தளபரப்பு குறியீட்டுக்காக வசூலிக்கும் கட்டணத்தின் மீது, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2022ல் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. அப்போது, இது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் குழுமங்கள் நிலையில் ஆராயப்பட வேண்டியுள்ளது. அதனால், இத்தீர்மானத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக, ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.