ADDED : டிச 10, 2024 11:43 PM
சென்னை:''ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதில், எந்த உள்நோக்கமும் இல்லை; பொது நோக்கத்திற்காகவே இணைக்கிறோம்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றுடன், கிராம ஊராட்சிகளை இணைக்கிறீர்கள். நகராட்சிக்கு அருகில் இருக்கும் ஊராட்சிகளை விட்டு விட்டு, மூன்று கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
இதற்கு எதிராக, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. எந்த அடிப்படையில் இவ்வாறு இணைக்கப்படுகிறது?
அமைச்சர் நேரு: தீர்மானம் நிறைவேற்றிய எந்த ஊராட்சியையும் இணைக்கவில்லை. கூடுதல் மக்கள் தொகை உடைய ஊராட்சி மக்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைய விரும்புகின்றனர். ஊராட்சி தலைவர்கள் விரும்பவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு, நகர்ப்புறத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொது நோக்கத்திற்காகவே இதை செய்கிறோம்; எந்த உள்நோக்கமும் கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைய விருப்பமில்லை என்றால் விட்டு விடலாம்.
தங்கமணி: எந்த அடிப்படையில் அளவுகோல் வைத்துள்ளீர்கள் என்று தான் கேட்டேன்.
அமைச்சர் நேரு: இணைப்பு பணிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் அடங்கிய குழு போட்டுள்ளோம். ஆய்வு நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் இணைந்தால், நுாறு நாள் வேலை திட்டம் இல்லை. அதையெல்லாம் கவனத்தில் வைத்து தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.