ADDED : அக் 02, 2025 06:03 PM
தினசரி பத்திரிகைகள் அப்போது சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே வெளியாகி, மற்ற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட முதல் பத்திரிகை தினமலர்.
அந்த ஊரில் தினமலர் என்ன செய்ய போகிறது என்பது, அங்கு வெளியான முதல் இதழிலேயே தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டுபிடித்து, அவை குறித்து செய்திகள் வெளியிட்டு, அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றுக்கு தீர்வு காணும்படி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுப்பது தான் தினமலரின் சேவையாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது முதல் இதழ் தலையங்கம்.
அன்றைய பத்திரிகைகளுக்கான செய்திகள் பெரும்பாலும் டில்லி, லண்டன் போன்ற தொலைதூர, பெருநகரங்களில் உற்பத்தியாகும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அந்த நடைமுறையை தலைகீழாக புரட்டி போட்டது தினமலர்.
“உள்ளூர் மக்களுக்கும், அவர்களை பற்றிய செய்திகளுக்கும் தினமலர் முன்னுரிமை வழங்கும். ரைன் நதியை விட காவிரி எங்களுக்கு முக்கியம். தேம்ஸ் நதியை காட்டிலும் தாமிரபரணி எமக்கு முக்கியம். சொந்த வீட்டை கவனித்து விட்டு, அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பதே இன்றைய சூழலுக்கு பொருந்தும். ஏனென்றால், தமிழர்களாகிய நாம் பல துறைகளிலும் மற்றவர்களை விட பின் தங்கி இருக்கிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்வதே முதல் கடமை” என்று அறிவித்தது தினமலர்.
சொன்னதை செய்யும் முதல் படியாக, சின்னஞ்சிறு குக்கிராமங்கள் வரையில் செய்தி சேகரித்து அனுப்ப நிருபர்களை நியமித்தது. லண்டன் பார்லிமென்டில் யார் என்ன பேசினார்கள் என்பதற்கு பதிலாக, கிராமசபை கூட்டங்களில் என்னென்ன பிரச்னைகள் பேசப்படுகின்றன என்பது செய்தி ஆயிற்று.
தினமலரில் செய்தியான பிரச்னைகள் குறித்து சட்டசபையிலும் பார்லிமென்டிலும் மக்கள் பிரதிநிதிகள் பேசினால், அது முதல் பக்க செய்தியாக வெளியானது. அதை பார்த்த உடனே அதிகாரிகள் செயலில் இறங்கி, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க நேரிட்டது. பிரச்னை தீர்ந்து, தேவை பூர்த்தி ஆன மகிழ்ச்சியில் மக்களுக்கு தினமலர் மீது அபிமானம் உண்டானது. மக்களின் குரலாக ஒலித்த காரணத்தால், மிக சீக்கிரத்தில் தினமலர் திருநெல்வேலி மக்களின் செல்லப்பிள்ளை ஆயிற்று.