ADDED : ஜூலை 31, 2025 11:50 PM
சென்னை:நாளை துவங்க உள்ள, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவ திட்டத்துக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம், கடந்த மாதம் 15ம் தேதி துவக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அசோக் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் இனியன் ஆகியோர், தனித்தனியாக பொது நல மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை கவரும் உள்நோக்குடன், ஆக., 2ம் தேதி, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற பெயரில், மருத்துவ திட்டம் துவங்க உள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு பதிலளித்து, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தி.மு.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'அரசு திட்டங்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக பின்பற்ற வேண்டும்' எனக்கூறி, 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
மேலும், மனுவுக்கு தேர்தல் கமிஷன், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தி.மு.க., தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.