நான் இருக்கும் வரை மதவெறிக்கு இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்
நான் இருக்கும் வரை மதவெறிக்கு இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 27, 2025 07:27 AM

கள்ளக்குறிச்சி: ''மக்களிடம் மதவாதத்தை கொண்டு வர பா.ஜ., நினைக்கிறது'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கள்ளக்குறிச்சியில், நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில், அவர் பேசியதாவது: சிலர், வாயிலேயே வடை சுடுகிறார்களே, அவர்களை போன்றது அல்ல திராவிட மாடல் அரசு. பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றி, மக்களை நேரடியாக சந்திக்கும் திறன் கொண்ட அரசு. இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு.
இந்தியாவிலேயே தமிழகம் தனிக்காட்டு ராஜா என்பது போல், 11.19 சதவீதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளோம். எந்த துறையை எடுத்து கொண்டாலும் சாதனைகள். மத்திய அரசு வெளியிடும் தர வரிசைகள் அனைத்திலும் நம்பர் ஒன் இடம் தமிழகத்துக்கு தான். இதில் 5 சதவீதமாவது அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததா? 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் பாழாய் போன தமிழகம், திராவிட மாடலின் நான்காண்டு ஆட்சியில் குதித்து எழுந்திருக்கிறது.
தமிழகம் வளரவேக் கூடாது என்ற, மத்திய பா.ஜ., அரசின் வஞ்சகத்தை எல்லாம் தாண்டி இந்த இடத்தில் நிற்கிறோம். தமிழகத்தின் சாதனைகள், வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது. வறுமை, மத வன்முறை, படுகொலைகள், கல்வியை கெடுக்கும் முயற்சி, வேலை வாய்ப்பின்மை ஆகியவை தான் பா.ஜ.,வின் இந்தியா.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளை தாக்கும் மோசமான சூழலை பா.ஜ. அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலை, தமிழகத்தில் கொண்டு வர நினைக்கின்றனர். மதவாத அரசியல் செய்து, மக்களை பிளவுபடுத்த பா.ஜ., நினைக்கிறது.
பா.ஜ., எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும், ஒற்றுமையாக வாழும் தமிழக மக்களிடம் மத வெறியை துாண்ட முடியாது. இந்த ஸ்டாலினும், திராவிட மாடல் அரசும் இருக்கும் வரை மதவெறி ஆட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது.
பா.ஜ.,வை ஓட்டுகளால், தமிழக மக்கள் விரட்டி அடிப்பர். திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று. அவசர கோலத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளை செய்வதற்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் உடனே பெயரை இணைத்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் ஓட்டுரிமையை பாதுகாக்க தி.மு.க., அரசு துணையாக இருக்கும். வரும் 2026ல், தமிழக வளர்ச்சியின் அடுத்த பார்ட் துவங்க உள்ளது. அதற்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

