ADDED : செப் 22, 2024 02:59 AM
சென்னை:''அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தி.மு.க., அரசுக்கு ஸ்டாலின், அவரது மனைவி, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் என, நான்கு முதல்வர்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தை வாட்டி வதைக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக உள்ளது; கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது.
திறமையற்ற முதல்வரால், போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. குற்றம் அதிகரித்துள்ளது; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த 20 நாட்களில், ஆறு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
மக்களுக்கு, அரசியல் தலைவர்களுக்கு என, யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஆட்சிக்கு வந்து 40 மாதங்களாகியும் 'நீட்' தேர்வை ஒழிக்கவில்லை. எம்.பி.,க்கள் 40 பேரும் லோக்சபாவில் பெஞ்சு தேய்க்கின்றனர்.
முதல்வர் வெளிநாடு சென்று சைக்கிள் ஓட்டுகிறார். அவரது மகன் உதயநிதி, 'கார் ரேஸ்' நடத்துகிறார். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
அ.தி.மு.க., குறித்து அவதுாறு செய்திகளை, ஊடகங்கள் வெளியிடுகின்றன. கட்சியில் ஒருவர் கூட, எனக்கு எதிர்ப்பு இல்லை. கட்சி கட்டுக்கோப்போடு உள்ளது. அவ்வப்போது, அ.தி.மு.க., இணையும் என செய்தி வெளியிடுகிறீர்கள்.
பொதுக்குழுவில் நான்கு பேர் நீக்கப்பட்டனர். அவர்கள் நீக்கப்பட்டது நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.