ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை
ADDED : ஜன 09, 2025 07:23 PM
ஈரோடு:தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு தொகுப்பாக, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ உருண்டை வெல்லம், ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து, நேற்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான பணியை துவக்கினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு நாட்களுக்கு முன் வரை, பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வழங்கினர். தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொகுதிக்குள் இருக்கும் ரேஷன் கடைகளில், 'ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இயலவில்லை' என, போர்டு வைத்துள்ளனர். கடைகளில் வைத்துள்ள போர்டை பார்க்கும் மக்கள், எரிச்சலோடு கடை ஊழியர்களிடம் வம்புக்குச் செல்கின்றனர்.
இதுபற்றி கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம், தமிழக அரசு நேற்று முன்தினமே, இதுபற்றிய கடிதம் வழங்கி உள்ளது. மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பரிசு தொகுப்பு என்றும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அறிவித்ததையெல்லாம் விளக்கி, சிறப்பு அனுமதி தருமாறு கேட்டுள்ளனர். யாருக்கும் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அனுமதி கிடைத்ததும் பொங்கல் பரிசு தொகுப்பு கட்டாயம் வழங்கப்படும்' என்றனர்.

