பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு
பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு
ADDED : ஜன 10, 2025 11:35 PM
சென்னை:“பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அவ்வாறு தரம் உயர்த்தும் போது, தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என, பேரூராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தி.மு.க., - அசோக்குமார், “பேராவூரணி பேரூராட்சியில், நான்கு சாலைகளில் மழைநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். இப்பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?” எனக் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, “பேரூராட்சியின் வருவாய், மக்கள்தொகை சரியாக இருந்தால், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். தற்போது, 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
“ஏற்கனவே, 490 பேரூராட்சிகள் இருந்தன. அவை தரம் உயர்த்தப்படும் போது, பேரூராட்சி பணியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு குறையும் என தெரிவித்துள்ளனர். அதை ஆய்வு செய்து, நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.