ADDED : செப் 27, 2024 02:10 AM

சென்னை:பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் குறைகளை கேட்க ஆட்களை நியமிக்காத பல்கலைகளின் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சை பல்கலையும் இடம் பெற்றுள்ளது.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்களும், மிரட்டல்களும் உள்ளதாக புகார் உள்ளது.
அதேபோல், பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மற்றும் வசதி குறைபாடுகள் குறித்தும் மாணவர்கள் புகார் அளிக்கின்றனர். இவற்றை முறையிடவும், ஆலோசனை பெறவும் தகுதியான ஆட்கள் வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை பரிசீலித்த பின், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஒவ்வொரு பல்கலையிலும், மாணவர்களின் மன அழுத்தம், தற்கொலை முயற்சி உள்ளிட்டவற்றைப் போக்கும் வகையில், அவர்களின் குறைகளை கேட்கவும், ஆலோசனை கூறவும், தகுதியுள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரையோ, பலர் இணைந்த குழுவையோ நியமிக்க அறிவுறுத்தியது.
அதன்படி, கடந்த மாதம் வரை ஆலோசகர்களை நியமிக்காத பல்கலைகளின் பட்டியலை, தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், கர்நாடகா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தலா நான்கு பல்கலைகள், மேற்கு வங்கத்தில் மூன்று பல்கலைகள், ஆந்திராவில் இரண்டு பல்கலைகள், தமிழகத்தில் தஞ்சை தமிழ் பல்கலையும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து, தமிழ் பல்கலை அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் தகுதியான பேராசிரியரை, கடந்த வாரம் நியமித்தோம். அதுகுறித்த விபரங்களை, யு.ஜி.சி.,க்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளோம். ஆனாலும், பட்டியலில் எங் களை சேர்த்தது எப்படி எனத் தெரியவில்லை' என்றனர்.