எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை; அதனாலேயே டில்லியில் தோல்வி: பாரதி
எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை; அதனாலேயே டில்லியில் தோல்வி: பாரதி
ADDED : பிப் 10, 2025 06:29 AM
சென்னை: ''எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
அவரது பேட்டி:
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கின்ற மத்திய அரசு, பட்ஜெட்டிலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.
இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல, மும்முனை போராட்டத்தை தி.மு.க., நடத்தியது. யு.ஜி.சி., வரைவு அறிக்கையில், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் வன்மையாக கண்டித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
மாநில அதிகாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக மத்திய அரசு பறிப்பதை எதிர்த்து, அனைத்து தரப்பிலும் கண்டன குரல் எழுப்ப துவங்கி உள்ளனர்.
எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டி தரும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வரிப் பகிர்வில் கூட 6.28 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு தமிழகம் சார்பில் வழங்குகிறோம். அதில், 56,000 கோடி ரூபாயை மட்டும் திருப்பித் தருகின்றனர்.
இது எந்த விதத்தில் நியாயம். உத்தர பிரதேசம், பீஹார், குஜராத் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குகின்றனர். தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?
புயல் வெள்ள பாதிப்பு நிதி, ஆசிரியர்கள் சம்பளம், 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி என எதையும் தர மறுக்கின்றனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவுக்கால் தன்னை அடித்துக் கொண்டார். இருப்பினும், 90,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். இது தான் ஸ்டாலினுக்கு, மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கிற்கான எடுத்துக்காட்டு.
டில்லியில் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. அதனாலேயே அங்கே பா.ஜ., வென்றுள்ளது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரே விஷயம் தான்.
தங்களுக்குள் ஒற்றுமை இருந்தால் தான், தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை அறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

