வெள்ளை கொடியும் இல்லை; காவி கொடியும் இல்லை டில்லியில் முதல்வர் பேட்டி
வெள்ளை கொடியும் இல்லை; காவி கொடியும் இல்லை டில்லியில் முதல்வர் பேட்டி
ADDED : மே 25, 2025 01:10 AM
சென்னை:டில்லி விமான நிலையத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கான எஸ்.எஸ்.ஏ., கல்வி நிதியை வழங்க வேண்டும்; மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம், அங்குள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம்; செங்கல்பட்டு - - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
கிறிஸ்துவர்களாகிய மதம் மாறிய ஆதிதிராவிட மக்களையும் எஸ்.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பட்டியலிட்டு, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பேசினேன்.
கூட்டம் முடிந்ததும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன்; ஐந்து நிமிடங்கள் நேரம் கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்திற்கான நிதியை, நீங்கள் சொன்னதால் கொடுத்ததாக, பிரதமர் மோடி கூறினார். அதுபோல, இப்போது வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தேன். தமிழகத்திற்கு கல்வி நிதி கிடைக்கும் என, நம்பிக்கையோடு இருப்போம்.
டாஸ்மாக், மணல் குவாரிகளில் ஊழல் நடந்திருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு, பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் உடனுக்குடன் மறுத்து வருகின்றனர்.
ஆனாலும், திரும்ப திரும்ப பொய் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இப்படித்தான் செய்வர். இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். டில்லியில், நான் வெள்ளைக் கொடி காட்டப் போவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருக்கிறார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை; அவரிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எப்போது டில்லி வந்தாலும், அவர்களை சந்திக்காமல் செல்வதில்லை. சந்திப்பின்போது அரசியல் பேசினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

