அ.தி.மு.க.,வில் பா.ஜ., மத்தியஸ்தம் தவறில்லை: சொல்கிறார் தினகரன்
அ.தி.மு.க.,வில் பா.ஜ., மத்தியஸ்தம் தவறில்லை: சொல்கிறார் தினகரன்
ADDED : டிச 09, 2025 05:38 AM

திருப்பூர்: 'அ.தி.மு.க.,வில் நிலவும் கருத்து வேறுபாடு குறித்து பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்துவதில் தவறில்லை' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
திருப்பூரில் நேற்று முன்தினம் தினகரன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் அனைவரும் ஓரணியில் இணைய பா.ஜ., முயற்சி செய்கிறது. ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. அதைத்தான் பா.ஜ., செய்கிறது.
இதை தவறு என்றோ, மிரட்டலாகவோ, தலையீடாகவோ நான் பார்க்கவில்லை. பா.ஜ., மேற்கொள்ளும் முயற்சி நட்பு ரீதியானது.
செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள், விஜய் கட்சியில் சேர்கின்றனர் என்றால், அ.தி.மு.க., தலைமை அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.ம.மு.க., வெளியேற, அண்ணாமலை காரணம் என கூறுவது சரியல்ல. அவர் எனக்கு நல்ல நண்பர். இன்றும் என்னை தே.ஜ., கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறார்.
வரும் பிப்., மாதம் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன், அ.ம.மு.க., கூட்டணி குறித்து நல்லதொரு முடிவு தெரியும்.
இவ்வாறு கூறினார்.

