'நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இல்லை என்ற நிலை வர வேண்டும்!'
'நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இல்லை என்ற நிலை வர வேண்டும்!'
ADDED : நவ 22, 2024 02:01 AM

சென்னை, நவ. 22--
''நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்,'' என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி கிருஷ்ணகுமார் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று பொறுப்பேற்கிறார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று நீதிபதி டி.கிருஷ்ணகுமாருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அதில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசியதாவது:
அழகான மாநிலம் மணிப்பூர். அங்குள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணகுமார் பொறுப்பேற்கஉள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த அவர், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியிடம் பயிற்சி பெற்றார். 1991 - 1996ல் அரசு வழக்கறிஞராகவும், 2001- - 2006ல் அரசு சிறப்பு பிளீடராகவும் இருந்தார். 2013 முதல் 2016 வரை, கல்வித்துறை சிறப்பு பிளீடராகவும் இருந்தார்.
மென்மையாக பேசும் தன்மை உடையவர். எனவே, தன் ராஜாங்க திறமைகளை கொண்டு, மணிப்பூரில் அமைதி திரும்ப, அரசுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், ''நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தம் உள்ளதால், மரபை மீறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.
''உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எட்டு ஆண்டு காலத்தில், 28,248 பிரதான வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்புகளின் வாயிலாக, தலைமை நீதிபதியாகி உள்ளார்,'' என்றார்.
பின், நீதிபதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
சென்னை உயர் நீதிமன்றம் என்ற குடும்பத்தில், குழுவாக சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். என் முன் புதிய சவால்கள் உள்ளன.
ஏ.ஐ., உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீதித்துறையை மேம்படுத்த வேண்டும். நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
மாற்றத்துக்குரிய சக்தி வாய்ந்த ஆயுதம் சட்டம் என்பதை புரிந்து, வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி கிருஷ்ணகுமார், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 66 ஆகக் குறைந்துள்ளது.