கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க முயற்சிக்கக் கூடாது; வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி காட்டம்
கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்க முயற்சிக்கக் கூடாது; வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி காட்டம்
ADDED : ஜன 29, 2025 06:18 PM

மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்கக் கூடாது என்று நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., சார்பில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், வெளியாட்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட் அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் கோர்ட்டுகளை அரசியல் மேடையாக்கக் கூடாது என்று நீதிபதி காட்டமாக கேட்டுக் கொண்டார். மேலும், அவர் கூறுகையில், 'அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லையெனில் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கலாம். இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது,' எனக்கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

