அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை விசாரணைக்கு கால வரம்பு கூடாது: தேர்தல் கமிஷன்
அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை விசாரணைக்கு கால வரம்பு கூடாது: தேர்தல் கமிஷன்
ADDED : ஜூலை 05, 2025 12:33 AM
சென்னை:'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த, கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டாம்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
'அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது; உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யக்கூடாது' என, கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை, தேர்தல் கமிஷன் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மனுக்கள் தாக்கல் செய்தார்.
அவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் படி, கட்சியில் பிளவு உள்ளதா என விசாரித்து, திருப்தி அடைந்த பிறகு, விசாரணையை தொடர வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஏழு வாரங்கள் கடந்தும், தேர்தல் கமிஷன் எந்த முடிவையும் எடுக்க வில்லை. எனவே, அதன் விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க கோரி, அ.தி.மு.க., பொதுச் செயலர் தரப்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில், 'ஆரம்ப கட்ட விசாரணையை நடத்த, தேர்தல் கமிஷனுக்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டாம். விரைவில் விசாரணை நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரும் 10ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.