எம்.எல்.ஏ.,விடம் கைகூப்பி மன்னிப்பு கூடுதல் செயலர் கேட்டதால் சலசலப்பு
எம்.எல்.ஏ.,விடம் கைகூப்பி மன்னிப்பு கூடுதல் செயலர் கேட்டதால் சலசலப்பு
ADDED : ஜன 13, 2024 01:40 AM

பல்லடம்:பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அரசு அதிகாரி ஒருவர் தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
அமைச்சர் கயல்விழி அரசு கொறடா செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தி.மு.க. - எம்.எல்.ஏ. செல்வராஜிடம் அவர் எம்.எல்.ஏ. என்று தெரியாமல் அரசு கூடுதல் செயலர் ரவிச்சந்திரன் 'சீட்' மாறி அமருமாறு கூறினார். இதனால் கடுப்பான செல்வராஜ் கடைசியில் உள்ள சீட்டில் அமர்ந்தார்.
இதை பார்த்து அரசு கொறடா செழியன் தன் அருகில் வந்து அமருமாறு வற்புறுத்தியும் செல்வராஜ் வர மறுத்து அடம் பிடித்தார். அதன் பிறகே செல்வராஜ் எம்.எல்.ஏ. என்பது தெரிந்த ரவிச்சந்திரன் செல்வராஜிடம் இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டார்.
இதனால் சில நிமிடங்கள் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.விடம் அரசு அதிகாரி ஒருவர் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் கைகூப்பி மன்னிப்பு கேட்டது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.