ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு சவக்குழியில் இறங்கி போராட்டம் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு சவக்குழியில் இறங்கி போராட்டம் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ADDED : செப் 27, 2024 04:57 AM

அரியாங்குப்பம்: அரசு இடத்தில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சவக்குழியில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலை யின் இருபுறமும், 5 அடிக்கு அகலப்படுத்த நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
அதனையொட்டி, இப்பகுதியில் செட்டிக்குளம் பகுதியில், சாலையோரத் தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும், வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்கள், மாற்று இடம் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அரிக்கன்மேடு செல்லும் பகுதியில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள், தற் போது வசித்து வரும் இடத்திற்கு அருகில் உள்ள கோவில் இடத்தில் பட்டா வழங்க கோரி, 10 ரூபாய் சட்ட இயக்க நிறுவனர் ரகு மற்றும் 10 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு, 4 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில், பெட்ரோல் கேனுடன் இறங்கி, தங்களை புதைத்துவிட்டு, வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என கோஷமிட்டனர்.
அவர்களிடம், சப் கலெக்டர் அர்ஜூன்ராமகிருஷ்ணன், வருவாய் அதிகாரி அருண் அய்யாவு, தாசில்தார் குப்பன், எஸ்.பி., பக்தவச்சலம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த சப் கலெக்டர் உத்தரவிட்டார். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், அவர்கள் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனே போலீசார், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட ரகு உள்ளிட்டோரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடு பட்ட செட்டிக்குளத்தை சேர்ந்த ரகு, 50; உட்பட 14 பெண்கள் மீது, அரியாங்குப்பம் போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.