அடுத்து வரும் ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சி இருக்கும் ; முதல்வர் ஸ்டாலின்
அடுத்து வரும் ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சி இருக்கும் ; முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஆக 09, 2025 02:45 PM

சென்னை: திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
தென்குமரியில் இருந்து சென்னை வரை சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து செய்து வருகிறோம். வேலை வாய்ப்புகளை உறுதி செய்கிறோம்.
இதனால் தான் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கருணாநிதி ஆட்சிக்கு பின்னர் இப்போது தான் இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் அடைந்திருக்கிறோம்.
நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை. ஏன்... நாட்டோட வளர்ச்சியை ஒப்பிட்டு பார்த்தாலும் நாம் தான் விஞ்சி இருக்கிறோம். இதுதான் திமுக ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இது தான் ஸ்டாலின் ஆட்சி.
2011ல் இருந்து 2021 வரைக்கும் தமிழகம் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. இந்த 4 ஆண்டுகளில் அதை மீட்டு எடுத்து,வளர்ச்சி பாதையின் உச்சத்தில் நாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறோம்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவர்களின் நண்பர் மத்திய அரசு அளித்த புள்ளி விவரத்தையே சரியில்லை என்று இப்போது பேசுகிறார்.
வளர்ச்சியின் அளவீடு என்பது பொருளாதார அளவுகோல் தான். இந்த அடிப்படை கூடதெரியாமல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால் இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாதததை, மற்ற மாநில முதல்வர்கள் சாதிக்க முடியாத ஒன்றை இந்த ஸ்டாலின் சாதித்துவிட்டாரே என்பது தான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம். அதை நிச்சயமாக செயல்படுத்துவோம். அதை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழக மக்களின் ஆதரவுடன் எங்களின் பயணம் தொடரும்.