ஏமாற்றம் இருக்காது; மாற்றம் நிச்சயம் மீண்டும் சொல்கிறார் முதல்வர்
ஏமாற்றம் இருக்காது; மாற்றம் நிச்சயம் மீண்டும் சொல்கிறார் முதல்வர்
ADDED : செப் 24, 2024 07:09 PM
சென்னை:அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ''ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
'அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்' என, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம், அதாவது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன், துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்படுவார் என்ற தகவல் பரவியது. வெளிநாடு புறப்படும் முன் முதல்வர் அளித்த பேட்டியில், 'மாறுதல் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.
அமெரிக்க பயணம் முடித்து, அவர் திரும்பியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் உதயநிதி துணை முதல்வர் ஆகப் போகிறார் என தகவல் பரவியது. எந்த மாற்றமும் நடக்காததால், ஆளும் கட்சி வட்டாரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதற்கிடையில் மூத்த அமைச்சர்கள் சிலர், உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களை சமாளிக்க, மூத்த அமைச்சர் ஒருவருக்கும், உதயநிதியுடன் சேர்த்து துணை முதல்வர் பதவி வழங்க, ஆலோசனை நடப்பதாகவும் தகவல் பரவியது.
எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், நேற்று சென்னை கொளத்துார் தொகுதியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''பருவ மழையை எதிர்கொள்ள, தயார் நிலையில் உள்ளோம். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் ஆலோசனை நடத்தி உள்ளார். நானும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளேன். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் குறித்த, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அமைச்சர் ராஜா ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கை தான்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, ''ஏமாற்றம் இருக்காது. நிச்சயம் மாற்றம் இருக்கும்,'' என்றார் முதல்வர்.