வரும் 16ல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் கிடையாது
வரும் 16ல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் கிடையாது
ADDED : ஆக 13, 2025 04:03 AM
சென்னை: ''கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதால், வரும் சனிக்கிழமை 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்காது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப் பேட்டையில், 'தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் வாயிலாக, 92,836 பேர் பயன் பெற்றுள்ளனர். சனிக்கிழமை தோறும், இம்முகாம் நடந்து வருகிறது.
வரும், சனிக்கிழமை, 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி. அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.
எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.