கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு செய்கின்றனர்: உதயநிதி
கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு செய்கின்றனர்: உதயநிதி
ADDED : நவ 28, 2024 06:47 AM

சென்னை; ''அ.தி.மு.க.,வினர் கள ஆய்வு என்ற பெயரில் கலவர ஆய்வு நடத்துகின்றனர்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
பிறந்த நாளை ஒட்டி, சென்னை வேப்பேரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, உதயநிதி பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தி.மு.க., ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க போவது உறுதி. இரண்டாவது முறையாக, முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் அமரப் போவதும் உறுதி.
அடிதடி கலாட்டா
அ.தி.மு.க., கள ஆய்வு என்று சொல்லி, ஒவ்வொரு இடத்திலும் கலவர ஆய்வு தான் நடத்திக் கொண்டிருக்கிறது. கள ஆய்வு கூட்டம் நடக்கும் இடங்களிலெல்லாம் முன்னாள் அமைச்சர்களால் பேசக் கூட முடியவில்லை. கட்சியினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். தள்ளுமுள்ளு, அடிதடி கலாட்டாக்கள் தொடர்ந்து நடக்கின்றன. சொல்லப் போனால், கள ஆய்வு கூட்டங்களை இனியும் நடத்த வேண்டுமா என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.
கள ஆய்வுக்குப் போகும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நிறைய கருத்துக்களை பேசி வருகிறார். 'கூட்டணிக்கு வாருங்கள் என சொன்னால், 100 கோடி ரூபாய் கேட்கின்றனர்' என, பணம் எதிர்பார்த்து தான் அ.தி.மு.க., கூட்டணிக்கு கட்சியினர் வருகின்றனர் என்பதை கள ஆய்வு கூட்டத்தில் வெளிப்படையாகவே சீனிவாசன் பேசியுள்ளார்.
அதிக எழுச்சி
இந்த சூழ்நிலையில், முதல் கட்சியாக வரும் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் தி.மு.க., துவங்கி விட்டது. தேர்தல் முடிவில் நாம் தான் முதலில் வருவோம். தி.மு.க.,வுக்கு ஆதரவாக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, பெண்களிடம் அதிக எழுச்சி காணப்படுகிறது. இதிலிருந்தே அடித்துச் சொல்லலாம், தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.