அணை ஷட்டரை திருடுகின்றனராம்! அமைச்சர் துரைமுருகன் வேதனை
அணை ஷட்டரை திருடுகின்றனராம்! அமைச்சர் துரைமுருகன் வேதனை
ADDED : ஏப் 26, 2025 01:26 AM
சென்னை,:''புது ஷட்டர் மாற்றினால், திருடிக்கொண்டு போய் விடுகின்றனர். எனவே, அதை கழற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - காமராஜ்: ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்களை துார்வாரி வருகிறோம். அதை மார்ச் மாதத்தில் இருந்து, மே மாதத்திற்குள்ளாக முடித்தாக வேண்டும். அப்போதுதான் கடைமடைவரை தண்ணீரை எடுத்து செல்ல முடியும்.
அமைச்சர் துரைமுருகன்: திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், பாசன அமைப்பு ஆதாரங்களை துார்வார முடிவு செய்யப்பட்டது. சிறப்பு துார் வாரும் திட்டத்தின் கீழ், 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மே மாதத்திற்குள் பணி முடிக்கப்படும்.
காமராஜ்: மேட்டூர் அணை திறப்பதற்கு முன், நீரொழுங்கிகள் சரி செய்யப்பட வேண்டும். தமிழகம் முழுதும் அணைகளின் 'ஷட்டர்' பராமரிக்கப்படாமல் உள்ளது. அதற்கு நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: ஷட்டர்களுக்கு ரொம்ப நாளாக நிதி ஒதுக்காமல் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், நிதி ஒதுக்கி உள்ளோம். ஷட்டர் மாற்றினால் திருடிக் கொண்டு போய் விடுகின்றனர். சிலர் காசுக்காக செய்கின்றனர். எனவே, அதை கழற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது
புகார் இல்லை
சட்டசபையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''புதிதாக ஷட்டர் மாற்றினால், சிலர் திருடி விடுகின்றனர். அதை கழற்றாமல் இருக்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்றார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இதுவரை ஷட்டர் திருடுபோனதாக புகார் எதுவும் வரவில்லை' என்றனர்.

