'அவங்கள தடுக்க முடியாது; நீங்க போகாம இருங்க' மதுக்கடையை மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி
'அவங்கள தடுக்க முடியாது; நீங்க போகாம இருங்க' மதுக்கடையை மாற்ற கோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி
ADDED : மே 15, 2025 02:25 AM

மதுரை:டாஸ்மாக் கடையை அரசு மருத்துவமனை அருகே மாற்றுவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டார்.
அரசு நடவடிக்கை
இரு நீதிபதிகள் அமர்வு, 'டாஸ்மாக்கிற்கு, 6 மாதங்களுக்கு யாரும் மது வாங்க செல்லாதீர்கள். இச்சூழலில் எப்படி தொடர்ந்து கடையை வைத்திருப்பர்.
டாஸ்மாக்கை ஒழிப்பது என, வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுங்கள்' என கருத்து வெளியிட்டது.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், ஒரு வழக்கறிஞர் ஆஜராகி முறையிட்டதாவது:
தென் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடையை துவக்க, அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேறு இடத்திலுள்ள அக்கடை, மருத்துவமனை அருகே மாற்றப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் உட்பட, வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படும். மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை கோரி, அவசர வழக்கு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.இதையடுத்து, நீதிபதிகள்: இதனால் உங்களுக்கு என்ன பிரச்னை... டாஸ்மாக் கடைக்கு, 6 மாதங்களுக்கு யாரும் மது வாங்க செல்லாதீர்கள்.
விழிப்புணர்வு பிரசாரம்
இச்சூழலில் ஊழியர்களுக்கு சம்பளம், கடைகளுக்கு வாடகை கொடுத்து எப்படி தொடர்ந்து டாஸ்மாக்கை வைத்திருப்பர்?
'டாஸ்மாக் கடைகளை எப்படி ஒழிப்பது, மது அருந்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள், டாஸ்மாக் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு' என்பது குறித்து வீடுகள் தோறும் நீங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுங்கள்.
டாஸ்மாக் பக்கம் யாரையும் செல்லவிடாமல் தடுக்க, நீங்கள் நினைத்தால் முடியும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கடையை மருத்துவமனை அருகே மாற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு எதுவும் இருந்தால் தாக்கல் செய்யுங்கள்.
இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.