UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:57 PM

அசோக் சிங்கால் ஜி – ஒரு கர்மயோகி
- தத்தாத்ரேய ஹொசபலே
அகில பாரத பொதுச்செயலர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
பாரதத்தை பொறுத்தவரை, இது தேசத்தை கட்டமைக்கும் தருணம். புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் ஒரு புதிய பாரதத்தை உருவாக்க, ஒட்டுமொத்த தேசமும் உறுதிபூண்டுள்ளது.
பாரதம், தன் இயல்பை மறுக்கும் மனநிலையில் இருந்து மாறி, தன்னைப் பெருமிதப்படுத்தும் நிலைக்கு நகர்கிறது; அதன் சுய விழிப்புணர்வு இப்போது விழித்தெழுகிறது. இந்த மாற்றத்தை, பாரதத்தின் மறுமலர்ச்சி என்றே சொல்லலாம்.
பாரதத்தின் சுய விழிப்புணர்வை தட்டியெழுப்பி, இந்து சமூகத்தில் நம்பிக்கையை ஊட்டிய மகத்தான புருஷர்களில், மரியாதைக்குரிய அசோக் சிங்கால்ஜி பெயர் முன்னணியில் நிற்கிறது.
அவர் மீதான மதிப்பை வெளிப்படுத்தும் வகையில், மக்கள் அவருக்கு பல பட்டங்களை வழங்கி போற்றினர்.
சிலர் அவரை, ‘இந்து இதயங்களின் சாம்ராட்’ என்றனர்; சிலர் ‘ராம ஜென்மபூமி இயக்க முன்னோடி, இந்து மறுமலர்ச்சியின் நாயகன், தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர்’ என்றெல்லாம் அழைத்தனர்.
இருப்பினும், அசோக்ஜி ஆளுமையை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அவர் ஒரு கர்மயோகி. எந்த பலனையும் எதிர்பாராமல், அர்ப்பணிப்பு உணர்வோடு தன் கடமைகளைச் செய்தார்.
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் போதெல்லாம், அதற்கான பெருமையை அவர் தனதாக்கிக் கொள்ளாமல், இறைவனுக்கு சமர்ப்பித்தார். வெற்றியால் விளைந்த புகழில் இருந்து விலகியிருந்தார். புகழின் உச்சிக்கே சென்ற பிறகும், எளிமையையே விரும்பினார்.
தேச சேவைக்கு அர்ப்பணிப்பு
அசோக்ஜி அசாதாரண திறமைசாலியாகவும், புத்திக்கூர்மை நிறைந்த மாணவராகவும் திகழ்ந்தார். இருப்பினும், தன் அறிவாற்றலை சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், தேச முன்னேற்றத்துக்கு அர்ப்பணித்தார்.
அவர், செல்வாக்குமிக்க, வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சொந்த வாழ்க்கையில் பெரிய நிலைக்கு வர அவருக்கு பல வாய்ப்புகள் இருந்தன; ஆனால், அவர் தன் முழு வாழ்வையும் தேசத்திற்கு அர்ப்பணிக்கத் துணிந்தார்.
சுவாமி விவேகானந்தரைப் போல, தனக்கென எதையும் விரும்பாது சமுதாயத்துக்காகவும், தேசத்துக்காகவும் வாழ்ந்தார். அவரது ஆன்மிகத் தேடல், தனிநபருக்கானது அல்ல, அது சமுதாயத்தையும் தேசத்தையும் சார்ந்ததாகவே இருந்தது.
செதுக்கப்பட்ட ஆளுமை
மாணவப் பருவத்திலேயே அசோக்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தொடர்பு கிடைத்தது. இளம் பிராயத்திலேயே, மரியாதைக்குரிய பேராசிரியர் ராஜேந்திர சிங் (ரஜு பையா) வழிகாட்டுதலைப் பெறும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. மரியாதைக்குரிய பாபுராவ் தேவ்ரஸ், திறமையான சிற்பியைப் போல, அசோக்ஜி ஆளுமையை செதுக்கினார். பூஜனீய குருஜியின் வழிகாட்டுதலும் அவருக்கு தொடர்ந்து கிடைத்தது.
இந்த மாமனிதர்களின் தாக்கம், அசோக்ஜியின் அர்ப்பணிப்பு, உழைப்பு, மன உறுதி, அமைப்பு ரீதியான நிர்வாகத்திறன், ஒருங்கிணைக்கும் ஆற்றல் மற்றும் தொலைநோக்கு பார்வையில் வெளிப்பட்டது. பொறியியல் படிப்பை முடித்த உடனேயே, அவர் சங்க பிரசாரகராக மாறினார்.
விராட் இந்து சம்மேளனம்
மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றச் சம்பவம், முழு சமூகத்தையும் கவலையடையச் செய்தது. இந்து சமுதாயத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தீவிரமாக உணரப்பட்டது.
அப்போது, டில்லியில் ‘விராட் இந்து சம்மேளனம்’ ஒருங்கிணைக்கும் பொறுப்பு அசோக்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. டாக்டர் கரண் சிங் உள்ளிட்ட சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி சாதித்தார்.
துறவிகளின் வழிகாட்டுதலோடு, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, தன் அற்புத ஒருங்கிணைப்புத் திறனால், அந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்தார். சமுதாயத்தின் சூழலை சரியாகப் புரிந்து கொள்வது, அதைப்பற்றி சிந்திப்பது, திட்டமிடுவது, திட்டங்களை நேரடியாகக் களத்தில் செயல்படுத்துவது ஆகியவை அவரது தனித்துவமான பாணியாக அமைந்தன.
இணக்கமான இந்து சமுதாயம்
இந்து சமுதாயத்தின் முன்பு, ஒரு பெரிய சமூக சவாலாக, தீண்டாமை என்பது நுாற்றாண்டுகளாக இருந்து வந்தது. அசோக்ஜி, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை, சமபந்தி போஜனம் அல்லது அடையாளப் பூர்வ நிகழ்வுகளோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை என்பது இந்து தர்மத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு எதிரானது என்பதை, இந்து சமுதாயத்திற்கு உணர்த்துமாறு, துறவிகளிடம் கேட்டுக்கொண்டார். துறவிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரடியாக சென்று அவர்களை சந்திக்கத் தொடங்கினர்; இதுகுறித்த ஆய்வுகளும் உரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த, 1989 நவம்பர் 9ம் தேதி, அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீ காமேஷ்வர் சடுபால், முதல் கல்லை நாட்டியது, இந்த சமூக இணக்க செய்தியின் ஒரு பகுதிதான்.
ராம ஜென்மபூமி இயக்கம்
நவீன பாரதத்தின் மிகப்பரந்த சமூக- ஆன்மிக இயக்கங்களில் ராம ஜென்மபூமி இயக்கமும் ஒன்று. ராம்-ஜானகி ரத யாத்திரை, சிலா பூஜை, சரண்-பாதுகா பூஜை, ராம்ஜோதி போன்ற நிகழ்ச்சிகள், நாட்டின் பல பகுதிகளிலும் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. இந்த இயக்கம் முழுவதிலும் அசோக் ஜி பங்காற்றினார்.
கடந்த, 1990ல் நடந்த கரசேவையின் போது நிலவிய சூழலும், பல தொண்டர்களின் தியாகமும், இந்த இயக்கத்தை ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு எடுத்துச் சென்றன.
கடினமான சூழல்களிலும், அசோக்ஜியின் திட்டவட்ட நம்பிக்கை, தொண்டர்களுக்கு மாபெரும் ஊக்குவிப்பாக அமைந்தது. அவரது ஆழந்த நம்பிக்கை, ‘இது ராமபிரானின் வேலை. ராமபிரானே இதை நிச்சயம் முடித்து வைப்பார்’ என்பதாக இருந்தது.
தொலைநோக்கு கர்மயோகி
ஒரு இலக்கை அடைந்தவுடன் அங்கே நின்றுவிடாமல், அடுத்த இலக்கை நோக்கி நகர்வதே அசோக்ஜி ஆளுமையின் மிகப்பெரிய சிறப்பு. அவர், சமுதாயத்தின் முன் வந்த ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு தீர்வு காண மக்களை ஒருங்கிணைப்பதில், தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
அவரைப் பொறுத்தவரை, அமைப்பு ஒரு கருவி; சமுதாயமே இலக்கு; தேச சேவையே வாழ்வின் நோக்கம்.
அவர், சொந்த வாழ்க்கையின் வாய்ப்புகளைத் துறந்து, தேச சேவையைத் தேர்ந்தெடுத்தார். புகழ் அவரைத் தேடி வந்தது; அவர், புகழில் திளைக்காமல், விலகி இருந்தார்.
அவர், முன்னின்று வழிநடத்தினார்; ஆனால் ஒருபோதும் தனக்கு பெருமையை எதிர்பார்க்கவில்லை. அவர், போராடினார்; ஆனால் சுயநலத்துக்காக அல்ல.
அதனால்தான், அசோக் சிங்கால்ஜி வாழ்க்கை என்பது, ஒரு தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; அது, அர்ப்பணிப்பு, ஆத்மார்த்தமான ஆன்மிகத் தேடல், ஒருங்கிணைப்பு மற்றும் கர்மயோகத்தின் உத்வேகம் அளிக்கும் ஒரு அத்தியாயம்.
எனவே, அவரை ராம ஜென்மபூமி இயக்கத்தின் தலைவராக மட்டுமே பார்ப்பது, அவரது விரிவான ஆளுமையை சுருக்குவதாகி விடும்.
அவர் ஒரு கர்மயோகி. அவரது வாழ்க்கை, எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
