ADDED : பிப் 08, 2025 07:12 PM
சென்னை:சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆதிசேமாத்தம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு களம் அமைத்துக் கொடுத்ததே தி.மு.க., தான் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருக்கிறார். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடர்பாக அமைதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்துக் கட்சியினரும் வரவழைக்கப்பட்டனர். பேச்சு நடந்தது. முடிவில், அமைதிக்கான தீர்வு எட்டபட்டது. அதில் கையெழுத்திடாமல் ஓடி பதுங்கியது அ.தி.மு.க., அந்த விவகாரத்தில் ஏற்பட்ட கறையில் இருந்து தப்புவதற்காக, ராஜூ ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். எப்படி இருந்தாலும், அவர் எங்கள் சார்பான நபர் தான்.
முதல்வரை கொளத்துார் தொகுதியில் தோற்கடிப்போம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது அவருடைய வாய்க்கொழுப்பு. இப்படித்தான், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முதல்வர் ஸ்டாலினை ராயபுரத்திற்கு வந்து, என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்க்கலாம் எனக் கூறி அழைத்தார். அதற்கு அடக்கத்தோடு பதில் அளித்த முதல்வர், உங்களை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிக்க நான் தேவையில்லை; எங்கள் கட்சியில் இருக்கும் சாதாரண தொண்டனே போதுமானவர். அப்படி ஒருவரையே போட்டியிட வைக்கிறேன்; அவரே உங்களைத் தோற்கடிப்பார் என்று சொன்னார். சொன்னபடியே, தொண்டர் ஒருவர் ஜெயகுமாரை எதிர்த்து நிறுத்தப்பட்டார். படு தோல்வி கண்ட ஜெயகுமார் இப்போது ராயபுரம் பக்கமே காணோம். பட்டினப்பாக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் வருவதே இல்லை.
அதேபோல, இப்போது வேலுமணி கிளம்பி இருக்கிறார். ஒன்றும் பிரச்னையில்லை. அவரையும் வரச் சொல்லுங்கள். முதல்வர் தொகுதியான கொளத்தூர் தேவையில்லை.
துறைமுகம் தொகுதிக்கான கதவு தாராளமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அதன் பின் வேலுமணி என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

