தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
UPDATED : ஜன 11, 2026 11:42 AM
ADDED : ஜன 11, 2026 09:21 AM

வாஷிங்டன்: ஈரான் போராட்டம் நடந்து வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், '' கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது'' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது. மதகுரு அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி, வெளிநாட்டில் வசித்து வரும் அந்நாட்டு இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறது. ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே போராட்டத்திற்கு அமெரிக்கா தான் காரணம், அவர்கள் சதி வேலை செய்து தூண்டி விடுகின்றனர் என ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.

