சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி நடவடிக்கை எடுக்க திருமா வலியுறுத்தல்
சமூக நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சி நடவடிக்கை எடுக்க திருமா வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2024 09:33 PM
சென்னை:'மஞ்சக்கொல்லையில் சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில், கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்னை தொடர்கிறது. கட்சிக் கொடியை அறுத்தெறிந்தனர்; யாரும் கைது செய்யப்படவில்லை. அதனால், கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தெடுத்து விட்டனர். அது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது; வழக்குப் பதிவானது; யாரும் கைது செய்யப்படவில்லை.
உடையூர் கிராமத்தில், மஞ்சக்கொல்லையை சார்ந்த முத்துக்குமார், அரி உள்ளிட்ட, 10 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை உடையூர் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், 'ஊரைத் தாண்டிப்போய் குடியுங்கள்' எனக் கூறியுள்ளனர். அது வாக்குவாதமாக மாறியுள்ளது.
அப்போது, உடையூர் தலித் இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். மக்கள் ஓடிவந்து அவர்களை தடுத்துள்ளனர். போதையில் இருந்த அவர்களில் மஞ்சக்கொல்லையைச் சார்ந்த செல்லத்துரை என்பவரைத் தவிர, மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
தனியாக சிக்கிக்கொண்ட அவரை தலித் இளைஞர்கள் சிலர் தாக்கியதில், அவர் காயமடைந்துள்ளார். இதையொட்டி தலித் இளைஞர்கள் 5 பேரை, போலீசார் உடனே கைது செய்தனர். தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, மஞ்சக்கொல்லையைச் சார்ந்த வன்னியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில், 'அவன், இவன்' என, என்னை பா.ம.க., மாவட்ட செயலர் பேசி, தம் கட்சியினரின் ஜாதி உணர்ச்சிகளை துாண்டியிருக்கிறார். வன்னியர்களை துாண்டும் வகையில் பேசியதும், ஒரு பெண்மணி கடப்பாரையால் வி.சி., கொடிக் கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்திருக்கிறார்.
இது தொடர்பாகவும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ஜாதி வெறியைத் துாண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இரு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு, போலீஸ் துணை போய் விடக்கூடாது. வன்னியர் சங்க நிர்வாகிகள் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.