திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
ADDED : டிச 28, 2025 03:41 AM

சென்னை: 'விஜயும், சீமானும் பா.ஜ.,வின் பிள்ளைகள் என கூறும் திருமாவளவன், தி.மு.க.,வின் பிள்ளையா' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு விமர்சித்து உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடுமா' என கேட்கிறார்.
அவரால், 'கிறிஸ்துமஸ், ரம்ஜான் கொண்டாடுவதால் எய்ம்ஸ் வந்துவிடுமா' என பேச முடியுமா? ஓட்டு வங்கிக்காக, சிறுபான்மையினரை தொடுவதற்கே பயப்படுகிறீர்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என பா.ஜ., சொல்லவில்லை; அது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் விவகாரம் மக்கள் நம்பிக்கை சார்ந்தது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை காக்க அவர்கள் போராடுகின்றனர்.
மதச்சார்பின்மை எனும் பெயரில் மத வெறுப்புணர்வை திருமாவளவன் வெளிப்படுத்துகிறார்.
த.வெ.க., தலைவர் விஜயும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பா.ஜ.,வின் பிள்ளை என திருமாவளவன் கூறுகிறார்.
முதலில், திருமாவளவன் யாருடைய பிள்ளை? தி.மு.க.,வின் பிள்ளையா அல்லது காங்கிரசின் பிள்ளையா என அவர் பதில் அளிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் நோக்கமல்ல; பா.ஜ., வெற்றியே என் வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

