விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ; விரிசல் வராது என்கிறார் திருமா!
விவாதத்துக்கு வழி வகுத்த வீடியோ; விரிசல் வராது என்கிறார் திருமா!
UPDATED : செப் 25, 2024 11:58 AM
ADDED : செப் 25, 2024 11:51 AM

கோவை: ''நான் வெளியிட்ட, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வீடியோ, விவாதத்துக்கு வழி வகுத்து விட்டது; அதனால் கூட்டணியில் எந்த விரிசலும் வராது' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டியில் ஒன்றில், 'சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆகக்கூடாதா' என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பேட்டி அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியது. 'ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ரவிக்குமார் கூறி இருந்தார். 'ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தி.மு.க.,வை சேர்ந்த ஆ.ராசா கூறியிருந்தார்.
இது குறித்து, கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமாவளவன் அளித்த பதில்: ஆதவ் அர்ஜூனா கருத்தால் தி.மு.க., - வி.சி.க., இடையில் எந்த சலசலப்பும் இல்லை; விரிசலும் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எனது வீடியோ பலத்த விவாதங்களை எழுப்பிவிட்டது.
ஆதவ் அர்ஜூனா பேச்சு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசினேன். கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி தான் உட்கட்சி விவகாரங்களில் முடிவு எடுப்போம். ஆதவ் அர்ஜூனாவின் கருத்தால் தி.மு.க., உடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.