காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார் திருமாவளவன்
காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார் திருமாவளவன்
ADDED : மார் 30, 2026 03:22 AM

சென்னை: 'மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன்' எனக் கூறிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், வி.சி.க.,க்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சியில் பலர், 'சீட்' கேட்டு திருமாவளவனை நச்சரித்தனர். நேற்று முன்தினம் இரவு, 145 பேரிடம் திருமாவளவன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேர்காணல் நடத்தினார்.
ஆனால், பலர் 'சீட்' கேட்டு, அவரது மொபைல் போன் வழியே, அழுத்தம் கொடுத்தனர். இதனால், போனை 'சுவிட்ச் ஆப்' செய்த திருமாவளவன், கட்சி அலுவலகத்திற்கு வருவதையும் தவிர்த்தார்.
இதற்கிடையே, அவரது முகநுால் பக்கத்தில், நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, திருமாவளவன் பேசியதாவது:
எட்டு இடங்களில் போட்டியிட, 2,000க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்கள் அளித்தனர். இதில், எட்டு பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். இதில், சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இப்படி தேர்வு செய்கிற நிலை, எந்த கட்சி தலைவருக்கும் இருக்கக் கூடாது. மாவட்டக் குழு தேர்வு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்ப வேண்டும். இனி வரும் காலங்களில், வேட்பாளர்கள் தேர்வு முறை இப்படி தான் நடக்கும்.
இனி வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு, மாவட்ட நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டும். வேட்பாளர்களை நானே தேர்வு செய்கிற கடைசி தேர்தல் இது என்பதை வலியோடு தெரிவித்து கொள்கிறேன்.
நான் மாநில அரசியலில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் சூழல் மாற இருக்கிறது.
இந்நிலையில், காட்டுமன்னார் கோவிலில், நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு தர முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில், இரண்டாம் முறையாக, எம்.பி.,யாக இருக்கும் திருமாவளவன், கடந்த 2001ல் அப்போதைய மங்களூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பதவி காலம் முடிவதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்தார். இப்போது எம்.எல்.ஏ.,வாக தேர்வானால், எம்.பி., பதவியை அவர் இழக்க வேண்டியிருக்கும்.
