வக்ப் சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
வக்ப் சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 08, 2025 08:20 PM

சென்னை:வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட தலைநகரங்களில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சேப்பாக்கத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷானவாஸ், பனையூர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், திருமாவளவன் பேசியதாவது:
வக்ப் வாரிய திருத்த சட்டத்தை அறிமுகம் செய்தபோது, 'இண்டி' கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், வக்ப் வாரிய சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி விட்டனர். ஒரு மதத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ அரசு செயல்படக்கூடாது என்பது தான் மதசார்பின்மை.
சட்டத்தை பயன்படுத்தி, அரசமைப்பு சட்டத்தை அழிப்பது தான் பா.ஜ.,வின் வேலையாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் வேண்டாம். பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களின் ஓட்டுக்கள் மட்டுமே போதும் என பா.ஜ., நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

