மாற்று பாதையில் பயணிக்கிறார் திருமாவளவன்: சிதம்பரத்தில் பா.ஜ., அண்ணாமலை பேச்சு
மாற்று பாதையில் பயணிக்கிறார் திருமாவளவன்: சிதம்பரத்தில் பா.ஜ., அண்ணாமலை பேச்சு
ADDED : ஜன 26, 2024 05:30 AM

சிதம்பரம்: சமூக நீதியை காக்கக்கூடிய நரேந்திர மோடியை திருமாவளவன் தவறாக பேசினால், பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் அறநிலையத்துறை கையில் உள்ளது. அவற்றை சரியாக நடத்தாமல், மாதத்திற்கு ஒரு முறை தில்லை நடராஜர் மீது கை வைக்க வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் ரூ. 25 ஆயிரம் கோடி வருமானத்தை பெற்று தரும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள கோவில்களை சரியாக பராமரித்து பக்தர்களுக்கு வசதிகளை மேற்கொண்டால் ரூ.2 லட்சம் கோடி தமிழ அரசுக்கு வருமானம் கிடைக்கும். அறநிலையத்துறை அதை செய்யாமல், எப்படி கோவிலுக்கள் நுழையலாம், எப்படி கைப்பற்றலாம் என நினைக்கின்றனர்.
இத்தொகுதி எம்.பி., திருமாவளவன் நிறைய பொய் பேசுகிறார். தி.மு.க., ஆட்சியை அக்கட்சியினரை விட, திருமாவளவன்தான் அதிகம் பாராட்டுகிறார். அவர் எதற்காக தன் பயணத்தை துவங்கினாரோ, அந்த பாதையை விட்டு வேறு பாதையில் பயணித்து வருகிறார்.
சமூக நீதியை காக்கும் நரேந்திர மோடியை திருமாவளவன் தவறாக பேசினால், பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் போக்சபா தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் தடா பெரியசாமி, மாவட்ட தலைவர் மருதை, செயலாளர் ஏழுமலை. முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், ஆன்மிக பிரிவு ஜெயகோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மணலுாரில் உள்ள எடிசன் சி.பி.எஸ்.இ., பள்ளியில், முதல் தலைமுறை வாக்காளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.

