ADDED : ஆக 19, 2025 04:59 AM
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
பணி நிரந்தரம் செய்யக் கோரி துாய்மை பணியாளர்கள் போராடி வரும் நிலையில், 'அவர்களை பணி நிரந்தரம் செய்தால், தொடர்ந்து துாய்மை பணியையே செய்ய கட்டாயப்படுத்துவது போலாகி விடும்; எனவே, அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கூடாது' என, திருமா உள்ளிட்ட தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எந்த ஒரு தொழிலும், ஒரு சமூகத்தினர் மட்டும் செய்யும் நிலை இருக்கக்கூடாது. துாய்மை பணியை செய்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை, அத்தொழிலில் இருந்து மீட்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், போராடி வரும் துாய்மை பணியாளர்கள் மீது, தி.மு.க., அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த தமிழகமும், தி.மு.க., அரசு மீது கோபத்தில் உள்ளது.
மக்களின் கோபத்திலிருந்து அரசை காப்பாற்றுவதற்காக, இந்த யோசனை முன்வைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
துாய்மை பணியாளர்களை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, மற்ற அரசு துறைகளில் பணியமர்த்த வேண்டும். அவர்களுக்கு கடன் வழங்கி, தொழில் முனைவோர்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது பற்றி எதுவும் பேசாமல், துாய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது, அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். சமுக நீதி என்ற பெயரில் துாய்மை பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு யாரும் துணை போகக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.