திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேக முறைகேடு கடவுளுக்கே பாதிப்பு: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
திருநாகேஸ்வரம் கோவில் கும்பாபிஷேக முறைகேடு கடவுளுக்கே பாதிப்பு: உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
ADDED : ஏப் 10, 2025 03:57 AM

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வசூல், அனுமதியின்றி கோவில் நிதியை பயன்படுத்திய முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம், 2021 அக்., 24ல் நடந்தது. 'இதற்கான புனரமைப்பு பணியை நன்கொடையாளர்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; முன் அனுமதி இல்லாமல் கோவில் நிதியை பயன்படுத்தக்கூடாது' என நிபந்தனை விதித்து, கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை கமிஷனர் ஒப்புதல் அளித்திருந்தார்.
அவரது ஒப்புதல் இல்லாமல் கோவில் நிதி, 80 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. நன்கொடையாக பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதற்கு ரசீது, கணக்கு இல்லை. நன்கொடையாக வசூலித்த பணத்தை, அர்ச்சகர்கள் மனோகியநாதர், சங்கர் குருக்கள் அப்போதைய கோவில் செயல் அலுவலர், மேலாளருடன் சேர்ந்து தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அறநிலையத்துறையின் மயிலாடுதுறை அப்போதைய இணை கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டார். கும்பகோணம் உதவி கமிஷனர் விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் அடிப்படையில் அப்போதைய செயல் அலுவலர் மற்றும் மனோகியநாதர், சங்கர் குருக்களை வெவ்வேறு கோவில்களுக்கு இடமாறுதல் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மனோகியநாதர், சங்கர் குருக்கள் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி பி.புகழேந்தி அளித்த உத்தரவு:
நடவடிக்கை இல்லை
மனுதாரர்கள் இருவரின் இடமாறுதலுக்கு உயர் நீதிமன்றக் கிளை ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதே கோவிலில் இருவரும் தற்போது பணிபுரிகின்றனர்.
கும்பாபிஷேகத்தின் போது அப்போதைய செயல் அலுவலர், மேலாளருடன் சேர்ந்து மனுதாரர்கள், கோவில் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
செயல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. கோவில் நிதி 80 லட்சம் ரூபாய், விதிகளுக்கு புறம்பாக அனுமதி இன்றி செலவிடப்பட்டுள்ளது; அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
சுண்ணாம்புக் கற்களுக்கு பதிலாக சிமென்ட் பூச்சு மூலம் புனரமைப்பு பணி நடந்துள்ளது. இது நிபுணர் குழுவின் விதிகள், நிபந்தனைகளுக்கு புறம்பானது. இரு குவிமாடங்கள் நிபுணர் குழுவின் அனுமதியின்றி கட்டப்பட்டன. கோவில் கணக்குகளை பராமரிக்கும் வழிமுறை குறித்து, அறநிலையத்துறை கமிஷனர், 1999ல் சுற்றறிக்கை வெளியிட்டார். இக்கோவில் நிர்வாகத்தில் கணக்கு புத்தகம் பராமரிக்கவில்லை.
ரசீது புத்தகங்கள் இல்லை. மக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளுக்கு கணக்கு இல்லை. இக்குறைபாடு சிறப்பு தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு கமிஷனரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. நடவடிக்கை இல்லை. கோவில்களின் பராமரிப்பு, நிர்வாகத்தை உறுதி செய்ய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.
இருப்பினும், இவ்வழக்கில் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. வேண்டுமென்றே தவறுகள் செய்யப்பட்டுள்ளன. கடவுளின் பெயரில் நன்கொடை வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு, அனுமதி இல்லாமல் புனரமைப்பு பணி நடந்துள்ளது. தரமாக பணி நடக்கிறதா என கண்காணிக்கவில்லை.
பிரச்னையை அறநிலையத்துறையே மூடி மறைக்க முயற்சிக்கிறது. கோவில் நிதியிலிருந்து ஊழியர்கள் சம்பளம் பெறுகின்றனர் என்பதை அத்துறை உணர வேண்டும்.
சிவன் சொத்து குல நாசம்
ராகுவிற்குரிய ஒரே பரிகார ஸ்தலம் இந்த கோவில். முக்கிய கடவுள் சிவபெருமான். 'சிவன் சொத்து குல நாசம்' என்ற பழமொழி உண்டு. சாமானிய மக்களின் இந்நம்பிக்கை உண்மையில், பல நுாற்றாண்டுகளாக கோவில் சொத்துக்களை பாதுகாத்து வருகிறது. கடவுள் பெயரால் நன்கொடையாக வசூலித்த தொகையை அர்ச்சகர்களுடன் சேர்ந்து தவறாக பயன்படுத்தியதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
கணக்கில்லாமல் வசூல்
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் கடவுள். அவரது பெயரில் ரசீது, கணக்கு இல்லாமல் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. கடவுளின் நலன் கருதி இந்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடுகிறது. முதற்கட்ட விசாரணை நடத்தி, முறைகேட்டிற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில், வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி., மத்திய மண்டல எஸ்.பி., சண்முகப்பிரியா விசாரணையை கண்காணிக்க வேண்டும். மாதந்தோறும் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இக்கோவிலில் கும்பாபிேஷக பணி எவ்வாறு நடந்துள்ளது என்பதை கமிஷனர் உணர்ந்து பார்க்க வேண்டும்.
அறநிலையத்துறையின் சட்டம், விதிகளை பின்பற்ற வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற குறைபாடு ஏற்படாமல் இருப்பதை கமிஷனர் உறுதி செய்ய வேண்டும். விசாரணை ஏப்., 30க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.