தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஹிந்து தர்மம் நிலை நாட்டப்பட்டது!: ஆன்மிக பெரியோர் பேட்டி

ஹிந்து தர்மம் நிலை நாட்டப்பட்டது!: ஆன்மிக பெரியோர் பேட்டி

ஹிந்து தர்மம் நிலை நாட்டப்பட்டது!: ஆன்மிக பெரியோர் பேட்டி


ADDED : நவ 21, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து தர்மம் நிலை நாட்டப்பட்டது!

– காமாட்சிதாச சுவாமிகள், வாகீசர் மடாலயம், அவிநாசி.

முருகப்பெருமானின் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்; அனைவரும் எதிர்பார்த்து வந்த திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான வழிபாடு செய்வதற்கான பலனை இறைவன் நிச்சயம் வழங்குவான் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சி. ஹிந்து முன்னணி மற்றும் பல ஹிந்து அமைப்புகள் நீண்ட போராட்டம் நடத்தி, ஹிந்து தர்மத்தை நிலைநாட்டியுள்ளன. பக்தர்கள் செய்த தியாகம் இன்று வெற்றி பெற்றிருக்கிறது. முருகப்பெருமானின் திருவருள் நம் அனைவரையும் காக்கும்.

முருகப்பெருமானின் திருவருள்

– ஸ்ரீநடராஜ சுவாமிகள், கூனம்பட்டி திருமடம், திருப்பூர்.

ஜோதி வடிவான இறைவனை, ‘ஜோதியே சுடவரே.. சுடரொளி விளக்கே’ என்று, அடியார்கள் பாடியுள்ளனர். இறைவன் ஜோதி வடிவாக இருந்து பக்தர்களுக்கு திருவருள் புரிகிறார். கார்த்திகை தீபத்திருநாளில், திருவண்ணாமலையில் மலைமீது தீபம் ஏற்றுவது விசேஷமானது. அனைத்து கோவில் மற்றும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டால் இறையருள் கிடைக்கும்.

திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியருக்கும், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முருக பக்தர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது. இது, நமக்கெல்லாம் கிடைத்த பெரிய பாக்கியம். முருகப்பெருமானின் திருவருளால் இது நடக்கப்போகிறது. எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்.

ஹிந்துக்களின் மனதில் தீப ஒளி

– பஞ்சலிங்கேஸ்வரர், காமாட்சிபுரி ஆதினம்.

‘ஐந்து முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்; வெஞ்சமலரில் அஞ்சேல் என வேல் தோன்றும்’ என்ற முருகப்பெருமானின் பக்தி பாடல் வரிகளுக்கு ஏற்ப, யாரெல்லாம் சரவணபவ என்ற மந்திரத்தை கூறுகின்றார்களோ, அவர்களிடம் அச்சம் நீங்கி ஆறுமுகம் தோன்றும். கடந்த ஓராண்டு காலமாக, ஹிந்துக்கள் அனைவரின் நெஞ்சிலும் தீபம் என்ற தீ எரிந்து கொண்டிருந்தது.

இந்த தீ எப்போது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் எரியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது. தீபம் ஏற்றும் போது எவ்வாறு பிரகாசம் ஏற்படுகிறதோ, அதுபோன்ற ஒரு தீப ஒளி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது ஹிந்துக்கள் மனதில் உருவாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து ஹிந்துக்களின் மனதில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலத்தில் பின்பற்றி வந்த நடைமுறைகளை போன்று, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இறைவனின் ஆசீர்வாதம்

– மூர்த்தி சுவாமிகள், சபரிமலை யாத்திரை குழு, கருவலுார்.

இறைவனை பாரம்பரிய முறைப்படி வழிபட்டால், பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும். நமது முன்னார்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்ட வழியே நாமும் வழிபட வேண்டும். திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்துாணில் தீபம் ஏற்ற, இறைவனின் ஆசி கிடைத்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள முருகபக்தர்கள் ஒருங்கிணைந்து, தீபத்திருவிழாவை கொண்டாட வேண்டும்.

ஆவலுடன் காத்திருக்கிறோம்

– முத்துரத்தினம், பழநி பாதயாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர்.

திருப்பரங்குன்ற மலைமீது தீபம் ஏற்றலாம் என்ற கோர்ட் உத்தரவு அனைவரின் மனதையும் குளிர செய்துள்ளது. புண்ணியமிக்க ஆறு படைவீட்டில், முதலாம் படைவீட்டில், தீபம் ஏற்றுவதை காண இப்போதிருந்தே ஆவலுடன் காத்திருக்கிறோம். கடந்த, 30 ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வருகிறோம். திருப்பரங்குன்றத்தில் கடந்தாண்டு தீபம் ஏற்ற முடியாதது வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது. முருகப்பெருமானின் திருவருளால், இந்தாண்டு தீபம் ஏற்றப்படும்; உலகம் முழுவதும் இருள்நீங்கி சுடரொளி பரவட்டும்.

ஜோதி எனும் அருளாட்சி

– சண்முகசுந்தரம், செயலாளர், திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்னம்பாலிப்பு குழு.

அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும் போது, திருப்பரங்குன்றின் மீது தீபம் ஏற்ற, சிலர் இடையூறு செய்தனர். ஆனால், இறையருள் வென்றுவிட்டது. இது இறைவனின் சித்தம். யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆண்டுதோறும் தீபத்துாணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, வழிபட வேண்டும். எல்லாம் வல்ல அருணாச்சலேஸ்வரர், திருப்பரங்குன்றின்மீது ஜோதிமயமாக அருளாட்சி செய்யப்போகிறார்.

பாரம்பரியத்தை மதிக்கணும்!

செந்தில்நாதன், நிர்வாக அறங்காவலர், விவேகானந்தா சேவாலயம், திருமுருகன் பூண்டி.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்றுவதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. இது நிரந்தரத் தீர்வாகவும் நீடிக்க வேண்டும். முருகப்பெருமான் வழிபாடும், கார்த்திகை மாதத்தில் தீபத் துாணில் தீபம் ஏற்றும் மரபும் பல நுாற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஹிந்து சமயப் பாரம்பரியம். தமிழகத்தில் இதற்காக நீதிமன்றம் சென்று போராடி மீட்க வேண்டிய சூழல் வருத்தத்திற்குரியது. பிற மதத்தினர் சிலரின் முரண்பாடான கருத்துகளால் மக்கள் மனமும் நீதிமன்ற நேரமும் வீணடிக்கப்படுகிறது. பிற மதச் சகோதரர்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதே நிரந்தரத் தீர்வாகவும் மத நல்லிணக்கமாகவும் இருக்கும். எல்லா மதத்தினரும் இணைந்து இந்தத் தீபத் திருநாளைக் கொண்டாடுவது சிறப்பாக இருக்கும். பாரம்பரியச் சடங்குகளை மதித்து மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும்.

அனைவரும் கொண்டாடணும்!

ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆர்ஷ வித்யா பீடம், ஆனைமலை:

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றுவது அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டிய தீபத்திருவிழாவாகும். தற்போது, கோவில் நிர்வாகம் உள்ளிட்ட சிலர் மட்டுமே செல்ல அனுமதி அளித்து, கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கதக்கதாக நினைக்கவில்லை.

அனைவரும் சென்று ஆழமான பக்தியை வெளிப்படுத்தும் வகையில், வழிபட அனுமதிக்க வேண்டும். எனினும், நீதிக்கு தலைவணங்குகிறோம். தீர்ப்பினை மறு பரிசீலனை செய்ய, ஹிந்து சனாதான சொந்தங்கள் இணைந்து செயல்படுவோம். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே சரியான முடிவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us