திருப்பரங்குன்றம் சர்ச்சை:அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா? ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
திருப்பரங்குன்றம் சர்ச்சை:அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா? ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்
ADDED : ஜன 23, 2025 07:17 PM
சென்னை:திருப்பரங்குன்றம் மலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பிரியாணி சாப்பிட்டதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதன் விபரம்:
பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு:
ஹிந்துக்களின் உணர்வையும், எம்பெருமான் முருகன் குடி கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் மலையையும் அசிங்கப்படுத்தி உள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், ஹிந்து கோவில்களின் துாண்கள் உள்ளன. ஹிந்து கோவிலைத்தான் தர்காவாக மாற்றி உள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது, பிரியாணி உண்ணுவது எந்த வகையில் நியாயம். கலவரத்தை துாண்டும், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனியை கண்டிக்கிறோம். மலை மீது பிரியாணி உண்ண, ஆடு மாடுகளை வெட்ட, தன் மதத்தை துாக்கி பிடிக்க, முஸ்லிம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் முன் வந்துள்ளனர்.
அதேநேரம், இந்த கொடூரத்தை கண்டிக்க, ஹிந்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தமிழக அமைச்சர்கள் முன் வராதது ஏன்? சிறுபான்மையினர் ஓட்டுக்காக, பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளலாமா? திருப்பரங்குன்றம் மலையை காக்க, தமிழகம் முழுதும் ஹிந்து இயக்கங்களை ஒன்றிணைத்து, நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்:
தி.மு.க., ஆதரவில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, மனப்பாறை எம்.எல்.ஏ., அப்துல்சமது போன்றோர், திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டு, தேவையற்ற சர்ச்சைக்கு வித்திடுகின்றனர். இறைவனை வணங்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணமாக இல்லை. பிரியாணி போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்டு, அதன் வழியே ஒரு மத பதற்றத்தை உருவாக வேண்டும் என நினைக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை குறித்து, இவ்வளவு பிரச்னைகள் ஓடும் நேரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி, தீபம் ஏற்றிட, ஹிந்து சமய அறநிலையத்துறை எந்தவிதமான முன்னெடுப்புகளையும் செய்யாதது, கண்டனத்துக்கு உரியது.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக, ஹிந்து கோவில் உரிமையை பாதுகாத்திட, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், சேகர்பாபு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போன்றோர் எந்தவிதமான கருத்துக்களும் சொல்லாமல், அமைதியாக கடந்து செல்வது, அவர்கள் ஹிந்து விரோதத் தன்மையை உறுதி செய்கிறது.
தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற, முஸ்லிம் பிரதிநிதிகள், முஸ்லிம் என்ற உண்ர்வோடு செயல்படுகின்றனர். ஆனால், நாங்கள் ஹிந்துக்களுக்கு விரோதி இல்லை என சொல்லி, தேர்தல் நாடகம் நடத்தி வெற்றி பெறும் தி.மு.க., சிறுபான்மை ஓட்டுகளுக்காக தாஜா செய்யும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், திருப்பரங்குன்றம் விஷயத்தில் என்ன நிலைப்பாடு என்பதை, மக்கள் புரிந்து கொள்வர். ஹிந்துக்கள் தாங்கள் ஓரணியில் திரண்டு, முருகப்பெருமானின் மலையை பாதுகாத்திட செயல்படுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

