ADDED : ஜன 20, 2024 02:13 AM

திருப்பரங்குன்றம்,:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று ஏடு கொடுக்கும் விழா நடந்தது.
காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக ரத வீதிகளில் புறப்பாடாகி கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று சிவகாமி அம்பாள்
கரத்தில் சாத்துப்படி செய்தனர். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் சேர்த்தி சென்றனர். இரவு பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை புறப்பாடாகினர்.
தெப்பத்திருவிழா: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நாளை (ஜன.21) நடக்கிறது. அதற்குமுன் நிகழ்ச்சியாக இன்று (ஜன.20) தை கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிம்மாசனத்தில் புறப்பாடாகி ஜி.எஸ்.டி. ரோடு தெப்பக்குளம் தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய வைர தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.
இரவு தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.