நாளை கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம்
நாளை கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2025 04:20 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் திருஉருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும்.
திருப்பணிகள் நிறைவடைந்து ஜூலை 10ல் யாக சாலை பூஜை துவங்கியது. நாளை அதிகாலை 5:25 மணியிலிருந்து காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் மீது 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
வெள்ளித்தகடுகள்
மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்புள்ள நிலையில் ஏற்கனவே தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் சன்னதிகளின் முன் உள்ள நிலைகளில் உபயதாரர் மூலம் வெள்ளி தகடுகள் பொருத்தப்படுகின்றன. மூலஸ்தானத்திலுள்ள பக்தர்கள் உள்ளே நுழையும் பகுதியிலுள்ள பித்தளை கதவில் சேவல் உருவமும், வெளியேறும் பகுதியிலுள்ள பித்தளை கதவில் மயிலின் உருவமும் பெயின்ட்டால் வரையப்படுகிறது.
உணவுத்துறை ஆய்வு
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மோகன் ஆகியோர் பெரியரதவீதி, கீழரதவீதி, மேல ரத வீதி சன்னதி தெரு உட்பட குன்றத்திலுள்ள அனைத்து டீ, வடைக்கடைகள், ஓட்டல்களில் ஆய்வு நடத்தினர். கலப்பட டீ துாள் பயன்படுத்தக்கூடாது. கடையை துாய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். கலப்பட பொருட்கள், கலப்பட எண்ணெய்யை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர்.
ஊர் முழுவதும் பக்தி பாடல்கள்
ஊரின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள், திருப்புகழ் முற்றோதுதல், பன்னிரு திருமுறை தமிழ் வேத பாராயணம், தவில், நாதஸ்வர இசை ஒலிபரப்பப்படுகிறது. யாகசாலை பூஜை துவங்கியவுடன் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒளிபரப்பப்படுகிறது. ராஜகோபுரம், கோயிலின் முன் பகுதி 16 கால் மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.